ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்யாத மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தால் பொதுமக்கள் ஏமாற்றம்!!
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 ஆண்டு டிம்பர் மாதம் 23ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழக முதல்வரின் மஞ்சள் பை திட்டம் குறித்து பல்வேறு வகைகளில் மாவட்டம் தோறும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.
பிளாஸ்டிக்கை ஒழிக்க கொண்டுவரப்பட்டுள்ள இந்த ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரமும் வைக்கப்பட்டது .
மஞ்சள் பை கொடுக்கும் இயந்திரத்தில் ரூ.10, அல்லது இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களை செலுத்தினால், மீண்டும் மஞ்சள் பை என்ற வாசகம் பொறிக்கப்பட்ட துணிப் பை கிடைக்கும்.
இந்த தானியங்கி இயந்திரம் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், முக்கிய இடங்களிலும் வைக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடந்த மார்ச் 6-ஆம் தேதி மீண்டும் மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் திரு பிரதீப் குமார் திறந்து வைத்தார்.
இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கூட்டத்தில் கலந்து கொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளும் அதேபோல பல்வேறு பணி நிமித்தமாக ஏராளமான பொதுமக்களும் வருகை தந்து இருந்தனர் .
அப்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மீண்டும் மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தில் பொதுமக்கள் மஞ்சள் பை எடுப்பதற்காக நாணயங்களை செலுத்தினர் ஆனால் மஞ்சள் பை வரவில்லை.
தானியங்கி இயந்திரத்தில் நாணயங்களை போட்டால் மஞ்சள் பை வரும், தற்போது வேலை செய்யாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.