கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து மூலம் பரிசோதனை – மத்திய அரசு
கடந்த மார்ச் மாதம் பரவ துவங்கிய கொரோனா தொற்று உலகெங்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுபட்டுத்த உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்ரேல், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் அதில் ஓரளவுக்கு வெற்றி கண்டிருப்பதாகக் கூறினாலும், மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வர இன்னும் 2 மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.
தற்போதைக்கு அறிகுறி சார்ந்த மருத்துவத்தை அனைத்து நாடுகளும் மேற்கொண்டு சமாளித்து வரும் நிலையில் ஆயுர்வேத மருந்துக்கு புகழ்பெற்ற நம் நாட்டில் ஆயுர்வேத மருந்துகள் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தவோ, குண்டப்படுத்தவோ முடியுமா என்ற முயற்சியில் ஈடுபடவிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக கொரோனா பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் பணியாற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு இன்று முதல் ஆயுர்வேத மருந்துகள் கொடுக்கப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து “அஸ்வகந்தா, யஷ்டிமாடு, குடுச்சி பிப்பாலி, போன்ற ஆயுஷ் மருந்துகள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பணிபுரிபவர்களுக்குக் கொடுக்கப்பட்டு இன்று முதல் மருத்துவப் பரிசோதனைகள் தொடங்கியுள்ளன. ஐ.சி.எம்.ஆரின் தொழில்நுட்ப உதவியுடன் ஆயுஷ் அமைச்சகம், சுகாதார அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூட்டு முயற்சியான இதனை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகம் (CSIR) உதவியோடு செயல்படுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.