“விராட் கோஹ்லியை விட இவர் அதிக ரன்களை சேர்ப்பார்…” பாகிஸ்தான் வீரரின் கருத்து!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் இளம் வீரர்களில் மிகவும் நம்பிக்கை அளிக்கும் வீரராக விளையாடி வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதற்கிடையில் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். உள்ளூர் போட்டிகளில் விளையாடி மீண்டும் ஃபார்முக்கு வந்து இந்திய அணியில் விளையாட வேண்டும் எனவும் கருத்துகள் எழுந்துள்ளன.
அதே சமயம் கோலிக்கு ஆதரவான கருத்துகளும் எழுந்துள்ளன. தற்போது வரை கோலி 23000 சர்வதேச ரன்களையும் 70 சதங்களையும் அடித்துள்ளார். இன்னும் சில ஆண்டுகள் விளையாடும் பட்சத்தில் அவர் சச்சினின் அதிக ரன்கள் என்ற சாதனையை முறியடிக்கக் கூடும்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் பாபர் அசாம், விராட் கோலியை விட அதிக ரன்களை சர்வதேசக் கிரிக்கெட்டில் சேர்ப்பார் என மற்றொரு பாக். வீரர் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். சர்வதேசக் கிரிக்கெட்டை பாபர் முடிக்கும் போது கோஹ்லியை விட அதிக ரன்களை சேர்த்திருப்பார் எனக் கூறியுள்ளார். 27 வயதாகும் பாபர் அசாம் தற்போதுதான் சர்வதேசப் போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.