தவறான தகவல் பரப்புவதாகக் கூறி ‘கூகுளுக்கு’ தடை!
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான போர் இன்று ஒரு மாத காலமாக தொடர்ந்து வருகிறது. நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் சேர ஆர்வம் காட்டியதன் காரணமாகவே உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு உலக நாடுகள், “உக்ரைன், ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றன.”
அந்த வகையில் இரு நாடுகளுக்கிடையே போர் நிறுத்தம் தொடர்பாக பலக்கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் நேரில் சந்தித்து போர் நிறுத்தம் தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். இருப்பினும் இதில் ஒன்றில் கூட சுமூகமான முடிவு எட்டப்படாமல் போனது.
இந்த நிலையில் ரஷியாவின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், ‘கூகுள்’ தேடுதளத்திற்கு தடை விதித்து அறிவித்து உள்ளது. உக்ரைன் மீதான ரஷிய ராணுவத்தின் தாக்குதல் பற்றி தவறான தகவல்களை பரப்புவதால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக ரஷியா கூறி உள்ளது.
இதனிடையே உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போரில் ரஷிய ராணுவ நடவடிக்கை குறித்த போலிச் செய்திகள் மற்றும் ரஷியாவில் ஆர்ப்பாட்டங்களை தூண்டும் வகையிலான செய்திகளை வெளியிடுவதாகக் கூறி சமூக ஊடக நிறுவனங்கள் மீதான வழக்கில், சில நாட்களுக்கு முன்பு அந்நாட்டு நீதிமன்றம் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.