உலகக் கோப்பை தொடரில் இருந்து வங்கதேசம் வெளியேறியது!!! அசத்தலான பேட்டிங்கினால் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா!!!
நேற்று(அக்டோபர்24) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி தோல்வி அடைந்ததால் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியாகியுள்ளது. மேலும் தென்னாப்பிரிக்கா அணியின் அசத்தலான பேட்டிங்கினால் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
நேற்று(அக்டோபர்24) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 23வது லீக் சுற்றில் வங்கதேசத்திற்கு எதிரின ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. டிகாக், கிளாசன், மார்க்ரம், மில்லர் ஆகியோரது சிறப்பான அதிரடியான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 382 ரன்கள் சேர்த்தது.
தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக குயின்டன் டிகாக் அதிரடியாக விளையாடி சதம் அடித்து 174 ரன்கள் சேர்த்தார். மறுபுறம் அதிரடி காட்டிய கிளாசன் அரைசதம் அடித்து 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எய்டன் மார்க்ரம் அரைசதம் அடித்து 60 ரன்கள் சேர்க்க இறுதியில் அதிரடியாக விளையாடிய மில்லர் 34 ரன்கள் சேர்த்தார். வங்கதேச அணியில் ஹசன் மஹ்முத் 2 விக்கெட்டுகளையும் சாகிப் அல் ஹசன், ஷோரிபுல் இஷ்லாம், மெகிடி ஹசன் மிராஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து 383 ரன்கள் எடுத்தால் உலகக் கோப்பை தொடரில் தொடரலாம் என்ற இலக்கோடு களமிறங்கிய வங்கதேச அணி 80 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 முக்கியமான விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வங்கதேச அணியில் ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தபடி இருக்க மறுபுறம் மஹ்முதுல்லா பொறுமையாக விளையாடி ரன்களை சேர்க்கத் தொடங்கினார்.
தொடர்ந்து விளையாடிய மஹ்முதுல்லா சதம் அடித்து 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க வங்கதேச அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலமாக தென்னாப்பிரிக்க அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா அணியில் சிறப்பாக பந்து வீசிய கெரால்ட் கோட்சே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மார்கோ ஜான்சென், ரபாடா, லிசாட் வில்லியம்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், கேசவ் மஹராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இந்த போட்டியில் தோல்வி பெற்றதன் மூலமாக நடப்பு உலகக் கோப்பை தொடரில் 4வது தோல்வியை பதிவு செய்த வங்க தேச அணி அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் வங்கதேச அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.