வீரர்களின் மடியில் கைவைத்த பிசிசிஐ: பரிசுத் தொகை இவ்வளவுதானா ?

Photo of author

By Parthipan K

வீரர்களின் மடியில் கைவைத்த பிசிசிஐ: பரிசுத் தொகை இவ்வளவுதானா ?

இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசாக 10 கோடி ரூபாய் மட்டுமே அளிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருகின்றன. இதனால் மற்ற நாட்டு வீரர்கள் கூட ஐபிஎல் ல் விளையாடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் எந்த நாட்டு வாரியங்களும் எந்த தொடர்களையும் அமைத்துக் கொள்வதில்லை.

இந்நிலையில் பிசிசிஐ தலைவராக கங்குலி நியமிக்கப்பட்ட பின் 2020 ஆம்  ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் முறையாக நடக்க இருக்கிறது. இதுவே அவரின் கடைசி தொடராகவும் இருக்கும் என்பதால் இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் மும்பையில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் அதிக பணம் கொழிக்கும் லீக் தொடராக ஐபிஎல் இருப்பதால் வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் இந்த ஆண்டு வீரர்களின் கனவை கெடுக்கும் விதமாக பிசிசிஐ ஒரு முடிவை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை வென்று சாம்பியன் பட்டம் வெல்லப்போகும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பரிசுத் தொகையில் பாதிதான் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. வழக்கமாக சாம்பியன் அணிக்கு வழக்கமாக வழங்கும் பரிசுத்தொகையான 20 கோடிக்குப் பதில் 10 கோடி பரிசாகவும், இறுதிப் போட்டியில் தோற்கும் அணிக்கு 4.30 கோடியும் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவினங்களைக் குறைப்பதற்காக இந்த முடிவை அறிவித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த முடிவால் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.