பிரதமர் மோடி-பில்கேட்ஸ் டெல்லியில் சந்திப்பு!
உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் அவர்கள் இன்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தம் சந்தித்து தன்னுடைய பில்கேட்ஸ்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இந்தியாவுக்கு பல உதவிகள் செய்ய முன்வந்துள்ளார்.
இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் இன்று மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் நிறைவேற்றப்படும் நற்பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் பில் கேட்ஸ் விளக்கிக் கூறினார். இந்தியாவின் சில மாநிலங்களில் சுகாதாரம், விவசாயம், கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைசார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் பில் (மற்றும்) மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஈடுபாடு காட்டி வருகிறது.
அதன்பின்னர் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சகம் சார்பில் நவீனக்கால வேளாண்மை செயல்திட்டம் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் அவர் பங்கேற்று பேசினார்.
பில்கேட்ஸ் அவர்கள் ஏற்கனவே தனது வருமானத்தின் ஒரு பகுதியை உலகளாவிய அளவில் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கும், எய்ட்ஸ், மார்பக புற்று நோய் உள்பட பல நோய் ஒழிப்பு திட்டங்களுக்கும் நன்கொடை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது