மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த சங்கதி தான். மேற்குவங்க மாநிலத்திற்கு வரும் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோயாரி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது மம்தா பானர்ஜி திடீரென அடிபட்டு காயம் அடைந்தார். தன்னை மர்ம நபர்கள் தாக்கியதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
காலில் படுகாயம் அடைந்த மம்தா மாவுகட்டுடன் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. தேர்தல் நேரத்தில் மம்தா நாடகமாடுவதாக பாஜக குற்றச்சாட்டியது. எனது வெற்றியை தடுக்க சதி நடப்பதாகவும், வீல் சேரில் அமர்ந்த படியே பிரச்சாரம் செய்வேன் என்றும் மம்தா திட்டவட்டமாக தெரிவித்தார். தற்போது அதேபோல் வீல் சேரில் அமர்ந்த படியே பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார்.
மெஜியாவில் நடந்த பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, “தனது பிரசாரத்திற்கு கூட்டம் வராததால் அமித் ஷா விரக்தியடைந்துள்ளார். நாட்டை வழிநடத்துவதற்கு பதிலாக, அவர் கொல்கத்தாவில் அமர்ந்து கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை துன்புறுத்துவதற்கான வழிகளை மேற்கொண்டு வருகிறார். பாஜக மறைமுகமாக சொல்ல விரும்புவது என்ன? என்னை கொன்றுவிட்டு தேர்தலில் வெல்லலாம் என நினைக்கிறார்களா? அப்படி நினைத்தால் அது தவறு என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.