விவாதம் நடத்தாமல் பாஜக அரசு மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றது… எம்பி திருச்சி சிவா விமர்சனம்…

Photo of author

By Sakthi

விவாதம் நடத்தாமல் பாஜக அரசு மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றது… எம்பி திருச்சி சிவா விமர்சனம்…

பாஜக தலைமையிலான மத்திய அரசு விவாதம் நடத்தாமல் ஒவ்வொரு மசோதாக்களையும் நிறைவேற்றி வருவதாக திமுக எம்.பி திருச்சி சிவா அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக எம்பி திருச்சி சிவா அவர்கள் மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக ஒருநாள் கூட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கவலைப்பட்டது இல்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக எம்பி திருச்சி சிவா அவர்கள் “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சென்று வந்ததால் மணிப்பூர் பிரச்சனை சரியாகி விட்டதாக பாஜக கட்சி கூறுகின்றது. மணிப்பூரில் தற்பொழுதும் பிரச்சனை நடந்து வருகின்றது. அந்த பிரச்சனையில் அப்பாவி மக்களின் உயிர்கள் பரிதாபமாக பறிபோகின்றது.

பிரதமர் நரேந்திய மோடி அவர்களுக்கு மணிப்பூர் பிரச்சனை பற்றி எந்தவொரு கவலையும் கிடையாது. ஆடைகள் இல்லாமல் இரண்டு பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டதை பற்றி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நரேந்திர மோடி அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பாஜக அரசு பதில் அளிப்பது இல்லை. மாறாக கேள்வி கேட்கும் திமுக உறுப்பினர்களை குறி வைத்து குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். அரசு இதுவரை என்ன செய்தது செய்கின்றது என்று பேசாமல் எதிர்க் கட்சிகளை முடக்கி விடுகின்றனர்.

மேலும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களின் பெயர்களையும் புரியாத வகையில் மாற்றி வைத்துள்ளனர். இந்த புதுப் புதுப் பெயர்கள் பாமரனுக்கு எவ்வாறு புரியும்?

முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஒற்றை முயற்சி காரணமாக திமுக கட்சி தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதே நிலமையை இந்தியா முழுவதிலும் ஏற்படுத்த முடியும். அதற்காகத் தான் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றது” என்று பேட்டியளித்துள்ளார்.