தமிழகம் மீது பாஜகவிற்கு இருப்பது தீராத வன்மம் –சு. வெங்கடேசன் சாடல்..!!
மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்திற்கு எந்தவித உதவியும் செய்வதில்லை என பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் வெள்ள நிவாரண நிதி கேட்டால் கூட மத்திய அரசு கொடுப்பதில்லை என்பது தான் தமிழக அரசின் குற்றச்சாட்டு. தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக பாஜக அரசு ஒரு சம்பவத்தை செய்துள்ளது.
அதாவது தேர்தல் முடிந்துள்ள நிலையில் மிக்ஜாம் மற்றும் வெள்ள நிவாரணமாக தமிழகத்திற்கு 275 கோடியும், வறட்சி நிவாரணமாக கர்நாடகாவிற்கு 3,454 கோடியும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தேர்தல் விதிமுறைகளுக்கு மத்தியில் தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று மத்திய அரசு இந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் கன மழை காரனமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 வட மாவட்டங்களும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் இந்த 8 மாவட்டங்களுக்கும் சேர்த்து மொத்தமாக 37,907.21 கோடி ரூபாய் நிவாரண தொகை வழங்குமாறு தமிழக அரசு கோரியது.
ஆனால் ஒரு ரூபாய் கூட வழங்காத மத்திய அரசு தற்போது வெறும் 275 கோடியை வழங்கியுள்ளது. இந்நிலையில் இதை விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவரது எக்ஸ் தளத்தில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல. வறட்சி நிவாரணம் 3,454 கோடி என அறிவிப்பு. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி கொடுத்தது 275 கோடி. தமிழகம் மீது பாஜகவிற்கு இருப்பது கோபம் அல்ல. வன்மம் தீராத வன்மம்” என குறிப்பிட்டுள்ளார்.