தோனியின் ஒப்பந்த நீக்கம் ! பின்னணியில் பாஜகவா ? வைரலாகும் டிவிட் !
தோனியின் பிசிசிஐ ஒப்பந்த நீக்கத்துக்குப் பின்னணியில் பாஜக செயல்படுவதாக டிவிட் ஒன்று வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
பிசிசிஐ நிர்வாகம் ஆண்டு தோறும் இந்திய அணி வீரர்களுக்கான ஊதியப் பட்டியல் விவரங்களை ஆண்டு தொடக்கத்தில் வெளியிடும். இதில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த தோனி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். ஆனால் இந்த ஆண்டு அவர் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. இதன் மூலம் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டதட்ட முடிவுக்கு வந்துள்ளது.
தோனி, கடைசியாக 2019 ஆம் ஆண்டு நியுசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடினார். அதன் பின்னர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோனி இந்திய அணிக்காக இனிமேல் தொடர்ந்து விளையாடுவது பகல்கனவுதான் என்ற சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சி எஸ் கே அணிதான்.
தோனியின் வயது காரணமாகவே அவர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நினைத்த வேளையில் அதற்குப் பின்னால் பாஜகவின் செயல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஸ்வீடிஷ் வாழ் பேராசிரியரான அஷோக் ஸ்வெய்ன் தனது டிவிட்டில், ‘தோனியை தனது தேச பக்தியை நிருபிக்க ராணுவத் தொப்பியை அணிந்தது, ராணுவச் சின்னத்தை கிளவுஸில் அணிந்தது என பலவற்றையும் செய்துவிட்டார். ராணுவத்திலும் சேர்ந்தது பணியாற்றிவிட்டார். ஆனால் அவர் ஜார்கண்ட் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாததால் அவர் தனது ஒப்பந்தத்தை இழந்துள்ளார். இந்தியனாக இருக்க பாஜகவில் சேருங்கள்’ எனத் தெரிவித்து சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார்.