மீண்டும் புதிய யாத்திரை திட்டம் தீட்டும் பாஜக! அனுமதிக்குமா தமிழக அரசு?

0
74

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக முருகன் பொறுப்பேற்ற சமயத்தில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தை மிகவும் ஆபாசமாக சித்தரித்து தெரிவித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் யாத்திரை நடத்தினார் முருகன் இதனை தொடர்ந்து பாஜக தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கால்பதிக்க தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து பாஜகவின் தமிழக தலைவராக இருந்த முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின்னர் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட சில நாட்களுக்கு திமுக அரசுக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்ட சூழலில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டக்கூடாது என்று தஞ்சாவூரில் கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தார்.

இந்த சூழ்நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மீண்டும் ஒரு பிரம்மாண்ட யாத்திரை நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஆசீர்வாத யாத்ரா என பெயர் சூட்டப்பட்டு இருப்பதாகவும், அந்தந்த பகுதியில் இருக்கின்ற பாஜகவின் தலைவர்கள் தலைமையில் யாத்திரையை நடைபெற இருப்பதாகவும், தகவல் கிடைத்திருக்கின்றன.

இந்த யாத்திரை இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் நாமக்கல், கோவை, திருப்பூர், உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வருங்காலத்தில் பாரதிய ஜனதா கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைமை திட்டம் தீட்டி வைத்திருக்கின்றது ஆகவே மூன்று நாள் பயணத்தை நடத்த இருக்கிறார் அண்ணாமலை என்று சொல்லப்படுகிறது.