நண்பேன்டா..!! விபத்தில் இறந்த நண்பனின் நினைவுநாளில் இரத்ததானம் செய்த இளைஞர்கள்! அவர்கள் சொன்ன முக்கிய காரணம்.?
சாலை விபத்தில் இறந்த நண்பனின் நினைவுநாளில் ரத்ததானம் வழங்கிய இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த நிர்மல்குமார் என்பவர், கடந்த ஆண்டு சாலைவிபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து ஏற்பட்டு உடலில் பலத்த காயமானதால் அதிக ரத்தம் வெளியேறியது.
இதனையடுத்து நிர்மலுக்கு உடனடியாக ரத்தம் வேண்டும் என்று மருத்துவர்கள் அவசரமாக தெரிவித்தபோது, நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சரியான நேரத்தில் ரத்தம் கொடுக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் நிர்மல் இறந்து ஓராண்டு நினைவாக நேற்று கண்ணீர் அஞ்சலி பேனர் அடித்து அனுசரிக்கப்பட்டது.
நிர்மலின் நினைவுநாளில் அவரது நண்பர்கள் மருத்துவமனையில் இரத்ததானம் கொடுத்தனர். இதுகுறித்து நிர்மலின் நண்பர்கள் கூறுகையில்; உரிய நேரத்தில் ரத்தம் கிடைக்காமல் போனதால்தான் எங்கள் நண்பன் உயிரிழந்தான், இனி அதுபோன்று ரத்தம் கிடைக்காமல் எந்த உயிரும் போக கூடாது என்கிற நல்லெண்ணத்தில் செய்கிறோம். இனி நிர்மலின் ஒவ்வொரு நினைவு நாளிலும் நாங்கள் ரத்ததானம் செய்யப்போவதாக கூறினர்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி பலரின் பாராட்டை பெற்று வருகிறது. நண்பன் என்றாலே ஒன்றாக சேர்ந்து குடிப்பது, ஊரைச்சுற்றுவது, சினிமா மற்றும் வெட்டி அரட்டை செயல்களை செய்துகொண்டு இருப்பார்கள் என்று ஒருபக்கம் பேசினாலும் நிர்மலின் நண்பர்களைப் போன்று சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நண்பன் இறந்தாலும் அதன் மூலம் நல்லது செய்யும் இவர்களை பலர் நண்பேன்டா..! என்று மகிழ்ச்சியுடன் அழைக்க வைத்துள்ளனர்.