துணிவுதான் கடைசி படம்…? பாலிவுட்டுக்கே செல்லும் போனி கபூர்!
அஜித் நடித்து வரும் துணிவு படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.
பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வெற்றி பெற்ற தயாரிப்பாளர் வெகு சிலரே. அமிதாப் பச்சன் கூட இங்கு படம் தயாரிக்க ஆசைப்பட்டு அவரால் வெற்றிப் பெற முடியவில்லை. இந்நிலையில்தான் பாலிவுட்டில் இருந்து போனி கபூரை தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தார் அஜித். மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குக்காக அவரை தன்னுடைய 3 படங்களுக்கு தயாரிப்பாளராக்கினார்.
நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு இப்போது துணிவு படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் பாங்காங்கில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ரசிகர்களே சேர்ந்து அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என போஸ்டர் அடித்து ஒட்டி இருப்பது சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் துணிவு படத்தோடு தயாரிப்பாளர் போனி கபூர் தமிழ் சினிமாவில் படங்கள் தயாரிப்பதை நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீண்டும் பாலிவுட்டுக்கே சென்று அவர் படத் தயாரிப்பில் ஈடுபட போவதாக சொல்லப்படுகிறது.