தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பணப்பட்டுவாடா உள்ளிட்ட விதிமீறல்களை கண்காணிப்பதற்காகவும், தடுப்பதற்காகவும் தேர்தல் பறக்கும் படையினர் சாலையிலும், வருமான வரித்துறையினர் விஜபிக்களின் வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.இதுவரை தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 200கோடிக்கும் அதிகமான ரொக்கம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் இருந்து அதிக அளவிலான விதிமீறல் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கு அடுத்தடுத்த இடங்களில் சென்னை, கோவை, திரும்பூர் ஆகிய பகுதிகள் உள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் மூலமாக கூட பணப்பட்டுவாடா நடக்கலாம் என்பதால் வங்கிகளையும் தேர்தல் ஆணையம் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. கூகுள் பே போன்ற ஆன்லைன் ஆப்களின் பணப்பரிமாற்றம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா செய்யலாம் என சந்தேகம் உள்ள முக்கிய கட்சிகளைச் சேர்ந்த வசதியான வேட்பாளர்கள், அவர்களுக்கு சொந்தமானவர்களின் வீடுகளில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று திமுகவிற்கு நிதி கொடுக்கும் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளரும், வர உள்ள சட்டமன்ற தேர்தலில் அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான எ.வ.வேலுவின் வீட்டிலிருந்து பணத்தை பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யலாம் என வருமான வரித்துறைக்கு புகார் கிடைத்துள்ளது. இ
இதையடுத்து 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் புறப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம், அருணை பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். எ.வ.வேலுவின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் வீடுகளிலும் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடித்து வருகிறது. திமுக வேட்பாளரான எ.வ.வேலுவை ஆதரித்து அக்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.