முடிந்தது முதல் நாள் இரவு நேர ஊரடங்கு!

Photo of author

By Sakthi

கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நோய்த்தொற்று தற்சமயம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் சில கடுமையான தடை உத்தரவுகளை பிறப்பித்து இருக்கின்றன.அந்த வகையில், நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்திருக்கிறது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையில் தனியார் மற்றும் பொது பேருந்து போக்குவரத்து, வாடகை, ஆட்டோ, டாக்ஸி மற்றும் மற்ற வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது. அவசர மருத்துவ உதவிகள், பால், மருந்து விநியோகத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல பெட்ரோல் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.தொடர்வண்டி மற்றும் விமான நிலையங்களுக்கு செல்வதற்கு மட்டும் ஆட்டோ போன்றவற்றிற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.. அதேபோன்று இன்று முதல் எல்லா சுற்றுலா தலங்களுக்கும் மக்கள் வரத்து தடை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பூங்காக்கள், கடற்கரை பகுதிகள், உயிரியல் பூங்காக்கள் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதி கிடையாது. பொது இடங்களுக்குப் போகும்போது பொதுமக்கள் எல்லோரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இரவு நேர ஊரடங்கின்போது சென்னையில் சுமார் 200 இடங்களில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இதன் காரணமாக, சென்னையில் இருக்கக்கூடிய எல்லா முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன, மேம்பாலங்கள் எல்லாம் மூடப்பட்டன, அதேபோல தமிழகம் முழுவதிலும் இரவு ஒன்பது மணி அளவிலேயே எல்லா கடைகளும் அடைக்கப்பட்டது, பேருந்துகளும் நிறுத்தப்பட்டன, ஆனால் அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் சென்றனர். அதேபோல பணிகளுக்கு சென்றவர்கள் அடையாள அட்டை மற்றும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கிய கடிதங்களை காவல்துறையினரிடம் காட்டி விட்டு அதன் பிறகு சென்றிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், காலை 4 மணிக்கு முதல் நாள் இரவு நேர ஊரடங்கு முடிவுக்கு வந்திருக்கிறது. 4 மணி முதல் பேருந்துகள் இயங்க தொடங்கின. குறிப்பாக வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும், தொலைதூர பயணம் செல்லும் பேருந்து சேவைகளும் தொடங்கியிருக்கிறது. அதோடு நேரம் செல்ல செல்ல அதிக அளவில் காலை நேரத்தில் தொலை தூர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மறுபடியும் இன்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.