இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டி நேற்று மதியம் இந்திய நேரப்படி 2 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இரண்டாவது நாளான இன்று இந்திய அணி 414 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
சிறப்பாக விளையாடிய பண்ட் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் சதமடித்து அசத்தினார்கள். கடைசி கட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ஜஸ்ப்ரீத் பூம்ரா அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
ஸ்டுவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் சிக்ஸரும் பவுண்டரிகளுமாக விளாசி 35 ரன்களை சேர்த்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அடிக்கப்பட்ட அதிக ரன்களாக இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. இதையடுத்து பும்ராவை ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.
முன்னதாக பிராட் 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டி 20 போட்டியில் ஒரே ஓவரில் 36 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதுதான் டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் கொடுக்கப்பட்ட ஓவர் என்ற மோசமான சாதனையை படைத்தது. இப்போது டெஸ்ட் போட்டிகளிலும் அதே மோசமான சாதனையை பிராட் பெற்றுள்ளார்.