இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் மே 31ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பேருந்து இயக்கம் உட்பட முக்கிய விவகாரங்களில் மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து பெரும்பாலான மக்களின் கோரிக்கையை ஏற்று மாநில அரசுகள் பேருந்து இயக்கம், சலூன் கடைகள் திறப்பு உள்ளிட்ட சில தளர்வுகளை அறிவித்து வருகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், தற்போது அமலில் இருக்கும் நான்காவது ஊரடங்கையொட்டி அறிவித்த தளர்வுகளில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்தது.
முதற்கட்டமாக சென்னையில் 200 பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வெளி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து இயக்கம் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடலூர், நாகை வழியாகக் காரைக்கால் வரை செல்லும் பேருந்துக்கு மாவட்ட அனுமதி வழங்கியுள்ளது. இந்த பேருந்து தமிழக மாவட்டங்கள் வழியாக செல்வதால் கடலூர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர்களிடம் இது குறித்து அனுமதி கோரப்பட்டிருந்தது. அவர்கள் உரியப் பாதுகாப்புடன் பேருந்தை இயக்குமாறு அறிவுறுத்தி அனுமதி அளித்துள்ளனர்.
இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுவை இடையே பேருந்து போக்குவரத்து துவங்கியுள்ளது.