மூன்று பேருடன் மட்டும் தேர்தல் பரப்புரை! தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!!

Photo of author

By Parthipan K

மூன்று பேருடன் மட்டும் தேர்தல் பரப்புரை! தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!!

தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் நேற்று (புதன் கிழமை) வெளியிட்டது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காகாணிக்க மாவட்ட மற்றும்  உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒருங்கிணைப்பு சுகாதார அதிகாரி நியமிக்கப்படுவார் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் அதிகபட்சமாக 3 ஆதரவாளர்களுடன் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வேர்பாளர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது.