வீட்டில் வேப்ப மரத்தை வளர்க்கலாமா? அறிந்து கொள்ளலாம்!
மருத்துவ குணங்களை தன்னுள் அதிகமாக தக்க வைத்து கொண்டிருக்கும் வேப்ப மரம் ஒரு தனித்துவம் மிக்க மரமாக உள்ளது. வேம்பு நல்ல கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. முருங்கை, வாழை, தென்னை என்று அனைத்து மரங்களும் மருத்துவ குணம் கொண்டைவைதான்.
ஆனால் அதில் இருந்து வேம்பு சற்றே வேறுபாடு கொண்டது.ஏனெனில் வேப்ப மரத்தில் இருக்கும் பட்டை, பூ, காய், பழம், இலை, கொளுந்து, வேர் என்று ஒவ்வொரு பகுதிக்கும் மருத்துவ குணங்கள் ஏராளமாக அடங்கி இருக்கிறது.
கருவேம்பு, நிலவேம்பு, மலைவேம்பு, சர்க்கரை வேம்பு எனப் பல வகைகள் இருந்தாலும், கருவேம்பையே பொதுவாக வேம்பு எனக் கூறப்படுகிறது. ஏறக்குறைய 400 ஆண்டுகள் வரையிலும் முதிர்ந்து வளரும் தன்மைக் கொண்டது.
வேப்ப மரத்தை நமது முன்னோர்கள் வீட்டின் முன்வாசல் பகுதியில் வளர்த்து வந்தனர். இதற்கு காரணம் வீட்டை நோக்கி காற்று மூலமாக வரும் கிருமிகளும், தீய ஆற்றல்களும் உள்ளே நுழைவதை தடுக்கும் சக்தி வேப்ப மரத்திற்கு உண்டு. இதனால்தான் வீட்டு முன்வாசலில் வேப்ப மரத்தை நட்டு வளர்த்து வந்தனர்.
வேப்ப மரத்தில் இருந்து வெளிவரும் காற்றை நாம் சுவாசிக்கும் போது நம் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. நுரையீரல் சுத்தம் அடைகிறது. காலையில் எழுந்து வேப்ப மரத்தின் பசுமையை கண் குளிர பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் கண்களுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும். கண் பிரச்சனைகள் குறையும்.