வெற்றிகளை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குகள்! தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

Photo of author

By Sakthi

அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டசபை தொகுதியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வகையில், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் பணம் போன்றவற்றை விநியோகம் செய்து அதன் மூலமாக விஜயபாஸ்கர் வெற்றி பெற்று இருக்கிறார். அதனால் அவரது வெற்றியை செல்லாது என்று அறிவித்து தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார் பழனியப்பன். அதோடு தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையை விடவும் அதிகமாக விஜயபாஸ்கர் செலவு செய்து இருப்பதாகவும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று பழனியப்பன் குற்றம் சுமத்தியிருந்தார்.

அதேபோல வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. அதிமுகவின் வேட்பாளர் தாக்கல் செய்த மனுவில் தேர்தல் நடைமுறைகளில் சரியான முறையில் பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். தபால் மற்றும் மின்னணு வாக்குகளை மறு எண்ணிக்கையை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

அதேபோன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் போட்டியிட்டு வெற்றி அடைந்த அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் கே கே பி பாலு தாக்கல் செய்த மனுவில் மின்னணு வாக்குப்பதிவு குறைபாடு இருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். அதேபோல வாக்கு எண்ணிக்கையும் குளறுபடியாக நடந்து இருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்தல் வழக்குகள் நீதிபதி பாரதிதாசனின் முன்பு இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த சமயத்தில் வழக்குகள் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பெருந்துறை சட்டசபை உறுப்பினர் ஜெயக்குமார்; இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோர் 4 வாரங்களில் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் ஆறாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி பாரதிதாசன்.