சி.பி.எஸ்.இ. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு!
சி.பி.எஸ்.இ. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பருவத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. அதன்படி, முதற்கட்ட பருவத்தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடந்தது. அதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதம் 16-ந் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 17-ந் தேதியும் தேர்வு தொடங்கி நடந்து முடிந்தது.
அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட பருவத்தேர்வு ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெறும் என்று சில நாட்களுக்கு முன்பு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் அதற்கான முழு கால அட்டவணையை சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டு இருக்கிறார்.
அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஏப்ரல் மாதம் 26-ந் தேதி தொடங்கி ஜூன் மாதம் 15-ந் தேதி வரையும் அதுபோல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 26-ந் தேதி தொடங்கி மே மாதம் 24-ந் தேதி வரையும் தேர்வு நடைபெற உள்ளது.
இதில் சில தேர்வுகள் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், சில தேர்வுகள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும் நடக்க இருக்கிறது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுபாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
கொரோனா தொற்றின் பரவல் மாணவர்களின் கற்றல் இழப்புக்கு வழிவகுத்தது. இதன்காரணமாக, இரண்டு பருவத்தேர்வுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அனைத்து பாடங்களும் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த தேர்வுகள் திட்டமிடப்பட்டு இருந்தது. மேலும், ஒரு மாணவரின் இரண்டு பாடத்தேர்வுகள் ஒரே நாளில் வந்துவிடாதபடியும் அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.