கோவையில் பெண்ணிடம் நகைபறிக்க முயற்சி: பொதுமக்கள் கொடுத்த நூதன தண்டனை..!

Photo of author

By Parthipan K

கோவை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து பெண்ணிடம் நகைபறிக்க முயன்ற இரண்டு இளைஞர்களை, பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினா என்பவர், அங்குள்ள விளையாட்டு மாரியம்மன் கோவில் அருகே உள்ள மளிகைக்கடையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் அங்கு வந்தனர். அதில் ஒருவர் மட்டும் வாகனத்தில் இருந்து இறங்கி ரத்தினா கழுத்தில் இருந்த செயினை பறித்து விட்டு தப்பி ஒட முயன்றுள்ளார்.

அப்போது ரத்தினா அந்த இளைஞரை தள்ளி விட்டு கூச்சல் போட்டார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து 2 இளைஞர்களையும் பிடித்து அருகில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர். பின்னர், இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் இருவரும் போத்தனூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகூப், ரத்துல் என்பது தெரிய வந்துள்ளது.