பெண்கள் கழுத்தில் அணிந்திரும் தங்க நகைகளை மோட்டார் சைக்கிள் வாகனங்களில் வந்து இளைஞர்கள் பறித்து செல்லும் சம்பவம் சமீபகாலமாகவே அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம் ஒரு பவுன் தங்கத்தின் விலை 65 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்த வருட இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை தொடும் என்கிறார்கள்.
எனவே, சுலபமாக வந்து பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பறித்து செல்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர்களே இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள். அதிலும், சாலை மற்றும் தெருக்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்தே இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலையில் ஹெல்மெட் மாட்டியபடி ஒருவர் வண்டியை ஓட்ட பின்னால் அமர்ந்திருக்கும் நபர் நகைகளை பறித்து செல்கிறார்கள்.
சில சமயம் அப்படி தங்க செயினை பிடித்து இழுக்கும்போது பெண்கள் கீழே விழுந்து அவர்களின் கழுத்தில் காயம் ஏற்படுவதும் உண்டு. சிசிவிடி கேமராக்கள் இருந்தால் போலீசார் அடையாளம் காண முடியும். இல்லையென்றால் அவர்களை கண்டுபிடிப்பதே போலீசாருக்கு சவாலாக இருக்கிறது. இதுதான் செயின் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு வசதியாக இருக்கிறது. தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இது நடந்தாலும் சிங்கார சென்னையில்தான் இந்த குற்றச்சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று காலை ஒரே நேரத்தில் திருவான்மியூர், பெசண்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்திருக்கிறது. 15 சவரனுக்கு மேல் நகைகளை பெண்கள் பறிகொடுத்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசி இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. இந்நிலையில்தான் தலைநகரில் இன்று காலை 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்திருக்கிறது. இது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.