ஐயோ என்னோட நிலமும் போச்சே! கிளாம்பாக்கத்திற்கு எதிராக கிளம்பும் ஜெகத்ரட்சகன் – என்ன ஆச்சு இப்போ?

Photo of author

By Vijay

ஐயோ என்னோட நிலமும் போச்சே! கிளாம்பாக்கத்திற்கு எதிராக கிளம்பும் ஜெகத்ரட்சகன் – என்ன ஆச்சு இப்போ?

Vijay

Updated on:

சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னை பாரிமுனையில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் உருவாக்கப்பட்டது. இது தாம்பரத்திற்கு 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோயம்பேட்டுக்கு மாற்றாக கட்டப்பட்ட இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் 2023 டிசம்பர் 30 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடக்கத்தில் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன, பின்னர் ஆம்னி பேருந்துகளும் இயங்கத் தொடங்கின. காலப்போக்கில் கடைகள், வணிக நிறுவனங்கள், ஏடிஎம்கள் போன்ற வசதிகளும் உருவாக்கப்பட்டன. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகில் முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்காக தனித்துப் பணிமனை உருவாக்கப்பட்டு, அது செயல்பாட்டுக்கு வந்தது.

பயணிகள் எதிர்கொள்ளும் சிரமம்

தற்போது, தினசரி 65,000 முதல் 1,00,000 பேர் இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், மிகப்பெரிய சிக்கலாக ரயில் நிலைய வசதி இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. தற்போது ரயில் நிலைய பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழகத்தில் அதிகம் வாகன ஓட்டம் காணப்படும் ஜிஎஸ்டி (GST) சாலையில், நடைமேம்பாலம் இல்லாததால், பயணிகள் பாதுகாப்பின்றி சாலை கடக்க வேண்டிய நிலை உள்ளது.

மேம்பாலம் மற்றும் நடைமேம்பால திட்டங்கள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் காட்டாங்குளத்தூர் வரை மேம்பாலம் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்காக தனிப்பட்ட மேம்பாலம் உருவாக்கப்படவில்லை. இதனால், மக்கள் பாதுகாப்பாக ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்லவும், வரவிருக்கும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்குச் செல்லவும் ஆகாய நடைமேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நடைமேம்பாலம் 74.50 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட உள்ளது. இந்தப் பணிகளை சென்னை மெட்ரோபாலிட்டன் டெவலப்மென்ட் அதாரிட்டி (CMDA) மற்றும் போக்குவரத்து குழுமமான கும்டா (CUMTA) இணைந்து மேற்கொள்கின்றன. 2023 மார்ச் 24-ஆம் தேதி, இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

நிலம் கையகப்படுத்தல் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு

கிளாம்பாக்கம் நடைமேம்பாலத்திற்கு தேவையான நிலம் ஜிஎஸ்டி சாலைக்கு அருகே 1 ஏக்கர் 45 சென்டு கையகப்படுத்தப்பட வேண்டியது. 2023 ஜனவரி 6-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலத்தை பொதுப்பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் என ஜூன் 17-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக, “பிரீமியம் லெதர் கார்ப்பரேஷன்” நிறுவன உரிமையாளர்களான திமுக எம்பி எஸ். ஜெகத்ரட்சகன், மற்றும் அவரது குடும்பத்தினரான ஜெ. ஸ்ரீனிஷா, ஜெ. ஜெ. சுந்தீப் ஆனந்த் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன், மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜரத்தினம் வாதிட்டனர். விசாரணைக்கு பிறகு, நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்தார்.

நீதிமன்றம் கூறிய முக்கியமான அம்சங்கள்:

நிலம் கையகப்படுத்துவது தொடர்பான முதல் அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில் வெளியிட வேண்டும். ஆனால், இது மாவட்ட அரசிதழில் மட்டுமே வெளியிடப்பட்டது.

பொதுமக்கள் கருத்து சொல்லும் வாய்ப்பை வழங்கிய பின்னரும், முறையான விதிமுறைகள் பின்பற்றப்படாமல் நிலம் பொது பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரின் இரண்டு அறிவிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. ஆனால், சட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றி, நிலம் மீண்டும் கையகப்படுத்த முடியும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், நடைமேம்பாலம் அமைக்க இன்னும் சில காலம் காலதாமதம் ஏற்படும்.

இதற்கிடையில், திமுக எம்பி எஸ். ஜெகத்ரட்சகன் தரப்பு, கிளாம்பாக்கம் நடைமேம்பாலத்திற்காக நிலம் கையகப்படுத்தியதற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.