நில அபகரிப்பில் ஈடுபட்ட விசிகவினர்! கட்சி தலைமைக்கு குட்டு வைத்த நீதி மன்றம்
எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நில அபகரிப்பு மற்றும் கட்ட பஞ்சாயத்து என்பது வழக்கமாகிவிட்டது.மக்களும் ஏறக்குறைய இதை சகித்துக் கொண்டு வாழ ஆரம்பித்து விட்டனர். ஆனால் சமீப காலமாக இதற்கு ஒரு எல்லையே இல்லாமல் அடாவடியாக நடந்து வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் தலித் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று சொல்லிக்கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது இது மாதிரியான புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணமேயுள்ளது.அதுவும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் இந்த கட்சியினர் அதிக அளவில் ஈடுபட்டு வருவதும் தினசரி செய்திகள் மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில் தான் தொடர்ந்து இவ்வாறு நில அபகரிப்பு செயல்களில் எடுபடும் தொண்டர்களை அரசியல் கட்சி தலைவர்கள் கட்டுபடுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தனசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது, நான் வீடு கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறேன். இதற்காக குன்றத்தூரில் சுமார் 53 ஏக்கர் நிலம் வாங்கினேன். அந்த இடத்தில் கட்டுமான வேலைகளை தொடங்கிய போது, சம்பந்தமேயில்லாமல் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்து பணம் கேட்டனர். பணம் தர நான் சம்மதிக்காததால், என்னையும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் என்னுடைய தொழிலாளர்களையும் மிரட்டுகின்றனர். எனவே, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் கமிஷனருக்கும், ஆவடி துணை போலீஸ் கமிஷனருக்கும் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த மனுவானது, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது.குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றவர்கள் நிலத்தை அபகரிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர் என்று ஏராளமான புகார்கள் வருகின்றன. அரசியல் கட்சி என்பது பொதுமக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும். அதற்கு மாறாக இவ்வாறு நில அபகரிப்பு வேலைகளில் ஈடுபடக்கூடாது.
சம்பந்தபட்ட மனுதாரர் இதுகுறித்து புகார் செய்தபோது காவல்துறையினரும் தீவிர நடவடிக்கை எடுக்காதது துரதிருஷ்டவசமானது. இம்மாதிரியான சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் தங்கள் கட்சித் தொண்டர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் உரிய முறையில் கட்டுப்படுத்த இதுவே சரியான நேரமாகும். தவறினால், பொதுமக்கள் மத்தியில் சம்பந்தபட்ட கட்சிப் பெயருக்கு குந்தகம் ஏற்படும்.
இவ்வாறு தேர்தல் செலவுக்குப் பணம் கேட்பது, அடுத்தவர் நிலத்தை அபகரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகளையும்,அவர்களது தொண்டர்களையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
அரசியல் கட்சியினரின் இதுபோன்ற செயல்கள், ஜனநாயகத்துக்கும், சட்டத்துக்கும் நேரடியாக சவால் விடுவது போல் உள்ளன. எந்த ஒரு நபரும், எந்த ஒரு அரசியல் கட்சியும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் சில புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், இந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மனுதாரருக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்து, அதில் பந்தல் அமைத்து, நாற்காலிகளை போட்டு உட்கார்ந்துள்ளனர். இதுபோன்ற சட்ட விரோத செயல்களை எல்லாம் இந்த நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்காது.
இந்த பிரச்சனையில் மனுதாரருக்கு ஆவடி துணை போலீஸ் கமிஷனர் உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் நில அபகரிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
காவல் துறை பாதுகாப்பு வழங்குவதற்கு ஏற்படும் செலவுகளை, விரும்பினால் மனுதாரரிடம் வசூலித்துக் கொள்ளலாம். மேலும், இனி இதுபோல குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு மனுதாரரை மிரட்டுவது, நிலத்தை அபகரிக்க முயற்சிப்பது போன்ற செயல்களில் எந்த ஒரு நபரும் ஈடுபடுவதை துணை போலீஸ் கமிஷனர் அனுமதிக்கக் கூடாது என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவித்துள்ளார்.
நில அபகரிப்பு மற்றும் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது இந்த பிரச்சனை மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிய வந்துள்ளது.