காசிமேடு மீனவரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!

Photo of author

By Parthipan K

காசிமேடு துறைமுகத்தில் மர்ம கும்பலால் மீனவர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடற்கரையில் இரவில் இளைஞர் ஒருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதை பார்த்த சில மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தலை, கை, கால்களில் பலத்த வெட்டு காயங்களுடன் வாலிபர் ஒருவர் சடலமாக கிடப்பது தெரியவந்தது. பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அந்த வாலிபர் திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்த மீனவர் சுடர்மணி (வயது 34) என்பதும் கொலை நடப்பதற்கு முன்பு தன்னை ஒரு கும்பல் கொலை செய்ய துரத்துவதாக சுடர்மணி தன்னுடைய வீட்டிற்கு போன் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து கொலையாளிகளை, காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சுடர்மணிக்கு திருமணமாகி மனைவியுடன் (செண்பகவள்ளி) உண்டான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு காவியா (வயது 12) மற்றும் அருண் (வயது 10) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்கு சென்று சுடர்மணி நேற்று முன்தினம் காலை தான் கரைக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் மது அருந்த காசிமேடு கடற்கரைக்கு சென்றபோது தான் மர்ம கும்பல் இவரை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இரவில் மீன்வர் ஓட ஓட வெட்டிக் கொலை கொல்லப்பட்ட இந்த கோர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.