தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை 3,49,654 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகங்களும் மக்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணி குறித்து முதல்வர் பழனிசாமி அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வேலூர் செல்கிறார். திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களின் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்யவுள்ளார். நாளை வேலூருக்கு செல்லும் முதல்வர் அங்கு விவசாயிகள், தொழில்துறையினர், மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் ஆலோசனையும் நடத்த இருக்கிறார்.
இதுவரை திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு நேரில் சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.