கள்ளக்காதலை அம்பலபடுத்திய சிறுவன் அடித்துக் கொலை; காதலன் சொரிமுத்து கைது! தொடரும் அபிராமி சம்பவங்கள்..!!
நெல்லை மாவட்டத்தில் கள்ளக்காதலுக்காக நான்கு வயது சிறுவனை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லே விகேபுரம் அருகேயுள்ள ஆம்பூர்ரோடு பகுதியில் அந்தோணி பிரவு என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு இவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த தீபா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு நான்கு வயதில் யோகேஷ் என்ற மகன் உள்ளார். அந்தோணி பிரவு வெளி மாநிலங்களுக்கு கேஸ் லாரியை ஓட்டும் பணியை செய்து வந்தார். ஓட்டுநர் என்பதால் அதிக நாட்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாமல் வெளி இடங்களிலே தங்கிவிடுவார்.
இந்நிலையில், தீபா தனது மகனுடன் வீட்டில் தனியாக அதிக நாட்களை கழித்து வந்தார். தீபா தனது உறவினருக்கு தனியார் சுய உதவிக்குழு மூலம் பணத்தை கடனாக வாங்கி கொடுத்துள்ளார். பணத்தை வசூல் செய்ய வந்த சொரிமுத்து என்பவருடன் தீபாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சிரித்து பேசி பழகியதால் நாளடைவில் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி அடிக்கடி தீபாவின் வீட்டிற்கு சொரிமுத்து சென்று வந்துள்ளார்.
கணவர் இல்லாத பல நாட்களில் கள்ளக்காதலன் சொரிமுத்துவுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் தீபா ஊர் சுற்றியுள்ளார். வழக்கம்போல கள்ளக்காதலனுடன் சேர்ந்து நெல்லை புதிய பஸ் ஸ்டாண்டு அருகே விடுதி ஒன்றில் தீபா தனது மகனுடன் தங்கியுள்ளார். அப்போது அந்தோணி பிரபு வீட்டிற்கு பேசுவதற்காக போன் செய்துள்ளார். போனை எடுத்த சிறுவன் யோகேஷ், அம்மாவுடன் கோயிலுக்கு வந்துள்ளதாக தெரிவித்தான். மனைவியின் மீது சந்தேகமடைந்த அந்தோணி வீடியோ காலில் வருமாறு தீபாவிடம் கூறியுள்ளார். வீடியோ காலை பேசாமல் தீபா தவிர்த்துள்ளார்.
தந்தையிடம் உண்மையை கூறிய சிறுவனை சொரிமுத்து கோயிலில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் விடுதி அறைக்கு வந்து சிறுவனின் கன்னத்தில் சொரிமுத்து வேகமாக தாக்கியுள்ளான். வலியை தாங்க முடியாத சிறுவன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளான். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தீபாவும் சொரிமுத்துவும் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். சிகிச்சை பெற்று வந்த சிறுவன் யோகேஷ் நேற்று காலையில் இறந்தார்.
இதனையடுத்து, தீபாவிடம் போலீசார் குறுக்கு விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவனை சொரிமுத்து தாக்கியது உறுதியானது. மேலும் தப்பிக்க முயன்ற சொரிமுத்து கைது செய்யப்பட்டுள்ளான். சிறுவனின் உடல் அவரது சொந்த ஊரில் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. கள்ளக் காதலால் ஒரு சிறுவனின் உயிர்போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதே போன்று பிரியாணியால் கள்ளக்காதல் உருவாகி தனது இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமி சம்பவம் தமிழ்நாட்டை அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது.