4000 உண்டியல் பணத்தை உயிர்காக்க உதவிய சிறுமி! இணையத்தில் குவியும் பாராட்டு..!!
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தான் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு திருச்சியை சேர்ந்த சிறுமி வழங்கியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் தாராளமான நிதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தியாவில் இருக்கும் பஜாஜ், டாட்டா, டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் பல கோடி ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளன. திரைப்பட நடிகர்களும் பல கோடி ரூபாய்களை நிவாரண நிதியை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், திருச்சி சஞ்சீவி நகரைச் சேர்ந்த ஜெகன் என்பவரின் மகள் பார்வதி. இவர் தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பார்வதி பள்ளியில் படிக்கும்போதே அன்றாடம் உண்டியில் பணத்தை சேமிக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தான் உண்டியில் சேர்த்து வைத்திருந்த ரூ.4015 பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
திருவிழா மற்றும் பண்டிகை நிகழ்ச்சியின் போது அப்பா, அம்மா கொடுத்த சிறு சிறு பணத்தையும் மற்றும் உறவினர்கள் கொடுத்த பணத்தையும் உண்டியலில் சிறுமி பார்வதி சேமித்து வந்துள்ளார். அவசர காலத்தில் நாம் இன்னொருவருக்கு உதவ வேண்டும் என்று சிறுவயதிலேயே மனிதநேயத்துடன் பேசுகிறார். சிறுமியின் செயல்பாடு பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டை பெற்று வருகிறது.

