தள்ளாத வயதில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்! விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட முதியவர்!
விமானத்தில் பணி பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட முதியவர் விமானத்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டார். ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தில் பல முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்கள் சமீப காலமாக ஏராளமாக நடக்கின்றன. நியூயார்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சங்கர் மிஸ்ரா என்ற பயணி பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறுநீர் கழித்த நபர் பெண் பயணி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இதே போல இண்டிகோ விமானத்தில் நடுவானில் பயணிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இவற்றைப் போல தற்போது மற்றொரு சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் டெல்லியில் இருந்து ஹைதராபாத் நோக்கி செல்வதற்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அதில் பயணிகள் அனைவரும் அமர்ந்து விட்டனர். அப்போது விமானத்தில் உள்ளே இருந்த பணிப்பெண்ணை முதியவர் ஒருவர் தவறான இடத்தில் தொட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்தப் பெண் முதியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு அந்த பயணியும் பணி பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விமான பணிப்பெண் உடனடியாக பாதுகாப்பு படை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.
பாதுகாப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து முதியவர் மற்றும் அவருடன் வந்தவரையும் கீழே இறக்கி விசாரணை மேற்கொண்டனர். பணிப்பெண்ணை தகாத முறையில் அந்த பயணித்தொட்டதாக ஊழியர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் இடம் சிறியதாக இருந்ததால் கை தெரியாமல் பட்டுவிட்டதாக அந்த பயணி தெரிவித்துள்ளார். வாக்குவாதங்கள் தொடர்ந்து நீடித்த நிலையில் பயணிகளும் விமான ஊழியர்களும் தலையிட்டு சமாதானப்படுத்தினார்கள்.
அந்த நபர் எழுத்து பூர்வமாக மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த போதிலும் மேலும் பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்க அந்த பயணியும் கூட வந்தவரும் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
இதுப்பற்றி ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் கூறுகையில் டெல்லி ஹைதராபாத் விமானத்தில் ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் தகாத முறையில் நடந்து கொண்ட பயணி பற்றி பொறுப்பு விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் அவர் கீழே இறக்கிவிடப்பட்டு பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளது.