தமிழ் மக்களின் டிஎன்ஏவில் சினிமா! வாரிசு துணிவு குறித்து பாமக தலைவர் பேச்சு!
கோவையில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் வாரிசு துணிவு பற்றி பேசியுள்ளார்.
கோவையில் நொய்யல் ஆற்றை மீட்போம் என்ற தலைப்பில் பசுமைத்தாயகம் சார்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் நொய்யல் ஆற்றின் நீரை 40 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீராக பயன்படுத்தலாம். ஏராளமான தொல்லியல் ஆதாரங்களைக் கொண்ட நொய்யல் ஆற்றங்கரைக்கு கிமு முதலே ஏராளமான சரித்திரங்கள் உள்ளன. சேர, சோழ,பாண்டியர், என மூவேந்தர்களும் நொய்யல் ஆற்றை பாதுகாத்து வந்துள்ளனர். மூன்று வேந்தர்களும் நொய்யல் ஆற்றங்கரைக்கு செய்த ஏராளமான நீர் மேலாண்மையை நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
கொங்கு நாட்டின் மையம் நொய்யல் ஆறு. தற்போது சுற்றுப்புற சூழல் மாசுபாட்டினாலும், பல்வேறு வகை பிரச்சனைகளாலும் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. நொய்யல் ஆற்றை பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நொய்யல் ஆற்றை பாதுகாக்க வேண்டும். நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் தலையாய நோக்கம்.
இதை நாம் சினிமாவின் மூலமாகவும் இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லலாம். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. தற்போது இளைஞர்களின் மத்தியில் பரபரப்பாக வாரிசா? துணிவா? என்ற வாதம் பெருமளவில் நடைபெறுகிறது. தமிழ் மக்களின் டிஎன்ஏவில் சினிமா ஊறிப்போன ஒன்று. இதன் காரணமாக எங்களைப் போன்றோர் அரசியலில் முன்னேறுவது மிகவும் கடினமாக இருக்கிறது என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.