கடிகாரம் என்பது வெறும் நேரத்தை பார்ப்பதற்கு மட்டுமல்ல. நம்முடைய வாழ்க்கையின் நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் சக்தியும் இந்த கடிகாரத்திற்கு உண்டு. இதைப் பற்றி பலரும் அறியாமல் இருக்கிறார்கள். ஒரு வீட்டில் தீராத கஷ்டங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்றால், அதற்கு இந்த கடிகாரமும் ஒரு காரணமாக கூட இருக்கலாம்.
ஒரு வீட்டில் கடிகாரம் என்பது மிகவும் முக்கியமான ஒரு பொருள் ஆகும். அந்த பொருளை சரியான இடத்தில், சரியான திசையில் வைத்திருந்தால் மட்டுமே அந்த குடும்பத்தில் பெரிய அளவில் எந்த பிரச்சனைகளும் ஏற்படாமலும், வறுமை ஏற்படாமலும் இருக்கும்.
அதே சமயம் கடிகாரத்தை சரியான திசையில் மாட்டி வைத்திருந்தோம் என்றால் கோடீஸ்வர யோகத்தை கூட தரக்கூடிய வல்லமை அந்த கடிகாரத்திற்கு உண்டு. கடிகாரத்தை எந்த திசையில்? எந்த நிறத்தில்? மற்றும் எந்த வடிவத்தில்? வாங்கி நமது வீட்டில் மாட்டினால் நல்ல ஒரு யோகத்தை தரும், என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் காண்போம்.
இந்த பூமியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, சுழலுகின்ற காலச் சக்கரத்தை நமக்கு உணர்த்துவது இந்த கடிகாரம் தான். அந்த காலத்தில் நமது முன்னோர்கள் கடிகாரத்தை பயன்படுத்தியது இல்லை. ஆனால் வானத்தில் இருக்கும் சூரியனை பார்த்தே சரியான நேரத்தை கணக்கிட்டு கூறி விடுவார்கள். நமது முன்னோர்கள் சிறப்பாக வாழ்ந்ததற்கு காரணம், அவர்களது வீட்டில் கடிகாரம் இல்லாததுதான் என்று கூட கூறலாம்.
ஆனால் நம்மால் கடிகாரம் இல்லாமல் நேரத்தை கணக்கிட முடியாது. எனவே அனைவரது வீட்டிலும் கடிகாரத்தை பயன்படுத்தி வருகிறோம். இந்த கடிகாரத்தை எவ்வாறு வைத்துக் கொண்டால், வறுமை இல்லாமல் நாம் வாழ முடியும் என்பது குறித்து காண்போம்.
கடிகாரம் மாட்டுவதற்கு சரியான திசை என்றால் அது வடக்கு திசை தான். உங்கள் வீட்டில் வடக்கு பார்த்தவாறு இருக்கும் சுவற்றில் கடிகாரத்தை மாட்ட வேண்டும். அவ்வாறு மாட்டினால் கடிகாரம் தெற்கு பார்த்தவாறு இருக்கும். இப்படி இருந்தால் உங்கள் வீட்டில் பண கஷ்டம் வரவே வராது.
பொருளாதார சூழ்நிலை உயர்ந்து கொண்டே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோன்று வடக்கு திசையில் மாட்டக்கூடிய கடிகாரம் வட்ட வடிவத்தில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
வீட்டில் உள்ள அனைவரும் நோய் நொடி இன்றி நலமாக வாழ வேண்டும், குடும்ப தலைவனின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் கிழக்கு பக்கத்தில் இருக்கும் சுவற்றில் கடிகாரத்தை மாட்ட வேண்டும். அப்பொழுது கடிகாரம் மேற்கு பார்த்தவாறு இருக்கும். அதேபோன்று கிழக்கு பக்கத்தில் மாட்டக்கூடிய கடிகாரம் பிரவுன் கலரில் இருந்தால் சிறப்பாக இருக்கும்.
கிழக்குப் பக்க சுவற்றில் மாட்டக்கூடிய கடிகாரம் வட்ட வடிவம் அல்லது சதுர வடிவ கடிகாரமாக இருந்தால் நல்லது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சத்தம் எழுப்பக் கூடிய கடிகாரத்தை கிழக்குப் பக்க சுவற்றில் மாட்டினால், செல்வ செழிப்பு உண்டாகும் எனவும் கூறப்படுகிறது.
ஒருவேளை உங்களால் கிழக்குப் பக்க சுவற்றிலும், வடக்கு பக்க சுவற்றிலும் கடிகாரத்தை மாட்ட முடியவில்லை என்றால், மேற்குப் பக்க சுவற்றில் கடிகாரத்தை மாட்டிக் கொள்ளலாம். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் தெற்கு பக்க சுவற்றில் மட்டும் கடிகாரத்தை மாட்டக் கூடாது.
ஏனென்றால் தெற்கு பக்கம் என்பது எமதர்ம ராஜாவுக்கும், நமது முன்னோர்களுக்கும் உரிய திசையாகும். ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரத்தை கூர்மையாக கவனித்தால், அந்த கடிகாரத்தில் இருந்து ஒரு விதமான சத்தம் வரும். அந்த சத்தம் அந்த திசையில் இருக்கும் எமதர்மனையும், நமது முன்னோர்களையும் பாதிக்கும். எனவே இந்த திசையில் மட்டும் கடிகாரத்தை மாட்டக் கூடாது.
இந்த கடிகாரம் என்பதை நேரம் பார்ப்பதற்காக நாம் அடிக்கடி பார்ப்போம். அத்தகைய கடிகாரத்தில் இருக்கும் கண்ணாடி விரிசலாகவோ, உடைந்தோ இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் உருவாகி விடும் என்றும் கூறப்படுகிறது.
நமது கால நேரத்தின் அடிப்படையில், நமக்கு வரும் நல்லது கெட்டது குறித்து தீர்மானிக்கும் சக்தியும் இந்த கடிகாரத்திற்கு உண்டு. அதனால் இந்த கடிகாரத்தை எக்காரணத்தை கொண்டும் மெதுவாக ஓட விடக்கூடாது. அதாவது சரியான நேரத்தில் தான் கடிகாரம் ஓட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் ஐந்து நிமிடம் முன்னோக்கி ஓட விடலாம். ஆனால் ஒரு பொழுதும் ஒரு நிமிடம் கூட பின்னோக்கி ஓட விடக்கூடாது.
அதேபோன்று ஓடாத கடிகாரத்தையும் வீட்டின் சுவற்றில் மாட்டி வைக்க கூடாது. வீட்டில் நிறைய கடிகாரம் இருக்கிறது என்பதற்காக, ஆங்காங்கே கடிகாரத்தை மாட்டி வைக்க கூடாது. குறிப்பாக நிலை வாசலுக்கு வெளியே கடிகாரத்தை மாட்டக் கூடாது.