மதுரையை மிரள வைத்த முதலமைச்சர் உரை!

Photo of author

By Sakthi

வரும் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் மிகத்தீவிரமாக இருந்துவருகின்றன. அந்த விதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் திமுகவை சேர்ந்த கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த விதத்தில் மதுரையில் அதிமுகவின் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்த பிரசாரத்தின்போது பேசியதாவது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் எந்த மூலைக்குச் சென்றாலும் அதிமுகவை பற்றியும் என்னைப் பற்றியும் மற்றும் எங்களுடைய அமைச்சர்கள் பற்றியும் பேசி வருகின்றார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமி என்றால் யார் என்றே தெரியாது என தெரிவித்தார். ஆனால் இப்பொழுது அவருக்கு என்னை பற்றி விமர்சனம் செய்யவில்லை என்றால் இரவில் தூக்கம் வருவதில்லை என்று தெரிவித்தார்.

அதிமுகவைப் பொறுத்தவரையில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் யாரும் இல்லை அதனால் இந்த ஆட்சி சுலபமாக அகற்றிவிடலாம் என்று கருதிக் கொண்டு இருந்தார் ஸ்டாலின். ஆனால் அவருடைய நினைப்பு சாத்தியப்படவில்லை. மக்களாகிய உங்களுடைய ஆதரவுடன் எல்லாவற்றையும் கடந்து வந்தேன் ஒரு சாதாரண மனிதனாக இருப்பவன் முதலமைச்சர் என்ற பொறுப்பிற்கு வந்தால் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். இருந்தாலும் மக்களுடைய ஆதரவு காரணமாக, எல்லாவற்றிலும் நான் வெற்றி பெற்றேன் என்று தெரிவித்திருக்கிறார்.

நான் முதலமைச்சர் என்ற பொறுப்பிற்கு வந்தபிறகு சட்டசபையில் என்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். அந்த சமயத்தில் சட்டசபையில் திமுகவைச் சார்ந்தவர்கள் செய்த விரும்பத்தகாத செயல்கள் என்னென்ன என்பதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர் என்று தெரிவித்தார்.அதேபோல எங்களுடைய ஆட்சிக்கு இருக்கின்ற பெரும்பான்மையை நிரூபித்து காட்டியவுடன் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே சென்றார் ஸ்டாலின். இவ்வாறான ஒரு தலைவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களைப் பார்த்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதோடு எதிர்க்கட்சித் தலைவராக அவர் பணியை அவர் சரியாக செய்தாரா அதுவும் இல்லை. ஆனால் நான் முதலமைச்சராக பதவியேற்ற பின் ஒரு நாள் கூட சட்டசபைக்கு செல்லாமல் இருந்தது கிடையாது. சட்டசபை கூட்டத்தொடர் எல்லாவற்றிலும் அனைத்து வேலை நாட்களிலும் பங்கேற்ற ஒரே முதலமைச்சர் நான் மட்டுமே என பெருமிதம் தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. மதுரை மாவட்டத்தில் அதிமுக நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து இருக்கிறார் முதலமைச்சர்.