டெண்டர் விடல, பணம் ஒதுக்கல, ரோடே போடல, ஆனா ஊழல் நடந்துருக்கு! – முதலமைச்சர் கிண்டல்…
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருவாரூரில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது, அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களை விளக்கி கூறிய அவர், அதிமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றார்.
இந்தத் தேர்தல் மூலம் திருவாரூர் தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில், பன்னீர்செல்வத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். அதிமுக காணாமல் போகும் என பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்த போது காவிரி பாசன மாவட்டங்களை அழிக்கும் வகையில், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள் கொண்டுவருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஆனால், விளைநிலத்தை காப்பாற்றுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை ஏற்று, சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி, காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, விவசாயத்தை காப்பாற்றியது எடப்பாடி பழனிசாமி என்பதை மறுக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளையும் பற்றி கவலைப்படாதவர் ஸ்டாலின் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாடினார்.
அதிமுக ஆட்சியில் ஊழல்கள் நடந்திருப்பதாக ஆளுநரிடம் ஸ்டாலின் புகார் அளித்திருப்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் பழனிசாமி, ரோடே போடல, டெண்டர் விடல, பணம் ஒதுக்கல, ஆனால் 400 கோடிரூபாய் ஊழல் செய்துவிட்டதாக புகார் தெரிவிப்பதாக கூறினார். யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே படித்துப்பார்க்காமல் ஸ்டாலின் பேசி வருவதாகவும், அதை பார்க்கும் போது சிரிப்பா வருவதாக அவர் கிண்டலடித்தார்.
எங்களுடைய ஆட்சியில் தவறு நடந்திருப்பதை சுட்டிக்காட்டினால் பதிலளிக்க தயார் என்ற முதலமைச்சர், திமுகவின் ஆட்சியில் நடந்த தவறுகள் குறித்து பதிலளிக்க தயாரா? என்று கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதால் தான் அனைத்து துறைகளிலும் விருதுகளை குவித்து வருவதாகவும், அதனால் தான் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் என்ற நற்சான்று பெற்றுள்ளதாக கூறினார்.