தமிழகத்தில் திறக்கப்படுமா பள்ளிகள்! இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர்!

0
124

தமிழ்நாட்டில் எதிர்வரும் 19ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய இருக்கின்ற சூழலில் கூடுதலான தளர்வுகளை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.நோய் தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகின்ற சூழலில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் இடையேயும், பெற்றோர்களிடமும் எழுந்து வருகிறது.

இதுதொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் இணையதளம் மூலமாக வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். நேரடி வகுப்பு ஆரம்பிப்பது தொடர்பாக முதலமைச்சர் முடிவு செய்வார் என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல பள்ளிகளை திறப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையின் முடிவு முதலமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டு அவர் பள்ளிகள் திறப்பது தொடர்பாக அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். அதோடு திரையரங்குகள் திறக்கப்படுமா என்று திரைத்துறையினரும் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்சமயம் தமிழ்நாட்டில் ஒரு நாளைய பாதிப்பு 2500 கீழே குறைந்து இருப்பதால் சற்றே பொதுமக்கள் நிம்மதி அடைந்து இருக்கிறார்கள். நேற்றைய தினம் 2405 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 49 பேர் பலியாகி இருக்கிறார்கள் முப்பதுக்கும் அதிகமான மாவட்டங்களில் நூற்றுக்கு கீழ் பாதிப்பு குறைகிறது. கோயமுத்தூர், சென்னை, ஈரோடு, சேலம், தஞ்சை, திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு நூற்றுக்கும் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கூடுதலான தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த இருக்கிறார். இதில் சுகாதாரத்துறை மற்றும் கல்வித் துறையைச் சார்ந்த அதிகாரிகள் அதோடு தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு போன்றோர் பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் இருக்கின்ற மாணவர்களுக்கான பள்ளிகளை ஆரம்பிக்கலாமா என்பது தொடர்பாகவும், கல்லூரிகள் திறப்பு தொடர்பாகவும், ஆலோசிக்கப்படுகிறது. அதேபோல பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்புகளை வெளியிடுவது குறித்து இன்று மாலை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனை செய்ய இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.