பாஜகவின் தமிழக தலைவராக இன்று பொறுப்பேற்கும் அனாமலை! உற்சாகத்தில் தொண்டர்கள்!

0
65

தமிழக பாஜகவின் தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து பாஜகவின் கொள்கையான ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற கொள்கையின் அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார்.இதனையடுத்து இன்றைய தினம் அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்க இருக்கின்றார். இப்படியான நிலையில், அவருக்கு தமிழகம் முழுவதும் வரவேற்பு மற்றும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

நேற்றைய தினம் சேலம் மார்க்கமாக சென்னை சென்ற அண்ணாமலை கொண்டலாம்பட்டி அருகில் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் அந்த கட்சியின் தொண்டர்கள் இடையே அவர் பேசும்போது,திமுகவின் ஆட்சி பொய்யை மட்டுமே கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்ற மூன்று வருட கால அரசியலை உற்று நோக்கினால் திமுகவின் எதிரி பாஜக தான் என்பது தெளிவாக தெரிகிறது. நாங்களும் முடிவு செய்து விட்டோம் எங்களுடைய எதிரி திமுக தான் என்று தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்தும், இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் விதமாகவும், திமுக அரசியலை செய்து வருகின்றது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியை அமைக்கும் என்று அண்ணாமலை பேசி இருக்கின்றார்.

அதேநேரம் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுடன் ஒன்றிணைந்து நிற்கும் என்று அண்ணாமலை தெரிவித்ததற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நன்றியை தெரிவித்திருக்கிறார். முன்னாள் காவல்துறை அதிகாரி என்ற காரணத்தால், தமிழக பாஜகவின் தலைவராக அவருடைய செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்று அந்த கட்சியை சார்ந்தவர்கள் உற்சாகமாக இருந்து வருகிறார்கள்.

இப்படியான நிலையில், இன்று சென்னையில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜகவின் தமிழக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.