கடைசி நேர சொதப்பல்?… கிராபிக்ஸ் பணிகளால் பாதிக்கப்படுகிறதா ‘கோப்ரா’ ரிலீஸ்?
நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே விக்ரம் நடித்த படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. இதனால் ஒரு ஹிட்டுக்கு காத்திருக்கிறார். கடினமாக உழைத்து பல படங்களில் அவர் நடித்தாலும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று சொதப்பி அவரின் படங்கள் தோல்வி அடைகின்றன.
இந்நிலையில் இப்போது விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.
மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் விதத்தில் கோப்ரா என்னும் வார்த்தையை படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் தொடங்கி கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் படப்பிடிப்பு இழுத்துக்கொண்டே சென்றது. இந்த படத்தில் விக்ரம் 7 கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக வெளியிடுகிறார். சமீபத்தில் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நடந்தது.
இந்நிலையில் இப்போது ரிலீஸ் நெருங்கிவரும் நிலையில் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் வேலை இன்னும் முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.