மின்சார ரயிலில் மாணவர்கள் அட்டகாசம்! சக பயணிகள் அச்சம்
சென்னை மின்சார ரயில்களில் பயணிக்கும் மாணவர்கள் மற்ற பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கூச்சலிட்ட படி சென்றது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயிலில், நுங்கம்பாக்கம் மற்றும் கிண்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நேற்று மதியம் 1:00 மணியளவில், 100 க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் மொத்தமாக ஏறியுள்ளனர்.
பிறகு, அவர்கள் ரயிலின் ஜன்னல்களில் தொங்கிய படியும், ரயிலின் கூரையில் ஏறியும் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் தொடர்ந்து கூச்சலிட்ட படியே பயணம் செய்துள்ளனர். இதை பார்த்த சக பயணி ஒருவர் ‘வீடியோ’ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து ரயில் பயணியர்களில் சிலர் கூறியதாவது: மின்சார ரயிலில் படி மற்றும் ஜன்னல் உள்ளிட்ட பகுதிகளில் தொங்கியபடியும், கூரையில் ஏறியும் சில மாணவர்கள் ஆபத்தான முறையில் சாகசம் செய்து கொண்டு பயணம் செய்வது, பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது.
அதே போல ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கூச்சலிட்டபடி பயணம் செய்வது சக பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டிய மாணவர்கள் இப்படி மற்ற பயணிகளுக்கு கஷ்டத்தை அளிக்கும் வகையில் செய்வது வேதனை அளிக்கிறது.
இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து அவர்களின் கல்லுாரி நிர்வாகம் முறையான கவுன்சிலிங் அளிக்க வேண்டும். மேலும் இவ்வாறு தொடர்ந்து விதி மீறல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது, ரயில்வே பாதுகாப்பு படையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘ரயில் பயணத்தின் போது சக பயணியருக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு தொடர்ந்து விதிமீறல்கள், வன்முறையில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இது மட்டுமல்லாமல் கடந்த சில மாதங்களாக சென்னை மாநகர காவல்துறை சார்பாகவும் கல்லூரி மாணவர்கள் பஸ் மற்றும் மின்சார ரயில்களில் பயணிக்கும் போது ஒழுக்கத்துடன் மற்றவர்களுக்கு இடையூறு தராமல் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.