நாளை முதல் திறக்கப்படும் கல்லூரிகள்!

Photo of author

By Parthipan K

நாளை முதல் திறக்கப்படும் கல்லூரிகள்!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஆடை கட்டுபாட்டை கொண்டு வந்தது கல்லூரி நிர்வாகம். அதனடிப்படையில் மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்து கல்லூரிக்கு வர கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியது. இதில், ஒருசில இஸ்லாமிய மாணவிகள் சீருடையுடன் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர்.

ஹிஜாப் அணிந்து உள்ளே வர அனுமதி இல்லை என கூறி கல்லூரி நிர்வாகம் மாணவிகளை வெளியிலேயே தடுத்து நிறுத்தியது. இதனால் கோபமடைந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தின் இந்த முடிவை கண்டித்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் போராட்டத்தை எதிர்த்து இந்து மாணவர்கள் காவியுடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுப்பாட்டுக்கு தடை விதித்து உத்தரவிடக்கோரி அந்த கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதனால், கர்நாடக மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த ஆடை கட்டுபாடு குறித்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் மாணவர்கள் எந்தஒரு மதத்தையும் வெளிப்படுத்தக் கூடிய ஆடைகளை அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வர தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து அங்கு நிலவி வந்த பதற்றம் குறைந்த நிலையில், முதல் கட்டமாக உயர்நிலை பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கல்லூரிகளை திறப்பது குறித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் தலைமையில் பெங்களூருவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனையில், பி.யூ. கல்லூரிகள் மற்றும் பிற கல்லூரிகளை புதன்கிழமை (நாளை) முதல் திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது.