உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல்!! ரூ 25 ஆயிரம் மதிப்பிலான தரமற்ற முட்டை!!
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தரமற்ற முட்டை விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் ரூ 25 ஆயிரம் மதிப்பிலான தரமற்ற முட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பேக்கரி மற்றும் உணவகங்களுக்கு ஆர்டரின் பேரில் தரமற்ற முட்டை சப்ளை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளான சுருளி மற்றும் ஆரோக்கிய பிரபு ஆகியோர்கள் அடங்கிய குழு ஒன்று கூட்டப்பட்டது.
கிடைத்த தகவலின் படி TN 28 BU 8562 என்ற வாகனம் தரமற்ற முட்டைகளை ஏற்றி செல்வதாகவும் அது இப்பொழுது சுந்தர் லாட்ஜ் செரி ரோடு அருகே இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் விரைந்து சென்ற அந்த குழு வாகனத்தை சோதனை செய்ததில் அதில் தரமற்ற முட்டைகள் இருந்தது. பின்பு ஆய்வு மேற்கொண்டதில் இந்த முட்டைகள் அனைத்தும் பேக்கிரி மற்றும் உணவு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது என்று கண்டறியப்பட்டது.
பின்னர் அந்த வாகனத்தில் இருந்து சுமார் 2160 உடைந்த தரமற்ற முட்டைகளும் மற்றும் 3780 நல்ல முட்டைகளும் கைப்பற்றப்பட்டது.முட்டைகளுடன் அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த முட்டைகள் அனைத்தும் ராசிபுரம் பகுதியை சேர்ந்த கோகிலா முருகேசன் தம்பதியினரது என்று கண்டறியப்பட்டது.
பறிமுதல் செய்த உடைந்த தரமற்ற முட்டைகள் மற்றும் நல்ல முட்டைகளின் மதிப்பு ரூ 25 ஆயிரம் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இவ்வாறு தரமற்ற பொருட்களை விற்கும் நபர்கள் மீதும் மற்றும் அதன் நிறுவனத்தின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.