மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. இதில் உத்திரபிரதேச விவசாயிகள் மிக தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் , மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா லகிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரை சேர்ந்தவர் ஆவார். இந்த கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
எனவே அவரை எதிர்க்கும் விதமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பிஜேபி வாகன அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தது. அணிவகுப்பில் வந்த கார் ஒன்று விவசாயிகள் மீது மோதியதில் இரு விவசாயிகள் உயிரிழந்தனர்.
இதனால் லக்கிம்பூரில் கலவரம் நடந்தது, இதில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
மேலும் கலவரம் வெடிக்காமல் இருக்க லக்கிம்பூரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன.
உயிரிழந்தோரின் குடும்பத்தை நேரில் காண சென்ற காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி அதிரடியாக கைது செய்யப்பட்டார். லக்கிம்பூருக்கு செல்ல ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தற்போது பல தடைகளுக்கு பிறகு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரசார் நேற்று இரவு லக்கிம்பூருக்கு சென்றனர்.
பலியா தாலுகாவை சேர்ந்த லவ்பிரீத் சிங் என்ற விவசாயியின் வீட்டுக்கு சென்றனர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.பின்னர் அங்கிருந்து வன்முறையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ராமன் காஷ்யப் வீட்டுக்கு சென்றனர்.
உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரியங்கா, லக்கிம்பூர் கலவரத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டியது இழப்பீடு இல்லை, நீதி எனக்கூறினார். மேலும் அஜய் மிஸ்ரா பதவியில் இருந்தால் அவரின் கீழ் பாரபட்சம் இல்லா நீதி கிடைக்க வாய்ப்பில்லை எனக் கூறினார்.