நாடு முழுவதும் இன்று தொடங்கிய ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி!

Photo of author

By Parthipan K

நாடு முழுவதும் இன்று தொடங்கிய ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி!

இந்தியாவில் 12 வயதிலிருந்து 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கி உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வந்தது.

குறுகிய காலத்திலேயே வேகமாக பரவி உலக நாடுகள் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது இந்த கொரோனா வைரஸ். எனவே கொரோனா வைரஸின் பரவலை கட்டுபடுத்தும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் ஈடுபட்டு வந்தன. அந்த முயற்சியின் பலனாக கொரோனாவை எதிர்த்து போராடக்கூடிய வகையில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அந்த வகையில் இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதலில் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

அதன் பிறகு, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், அதற்கு அடுத்தபடியாக 45 வயதை கடந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு மே மாதம் முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ‘கோவாக்ஸின்’ தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று (மார்ச் 16) முதல் 12 வயதில் இருந்து 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது. இந்த வயது சிறுவர்களுக்கு ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி இரண்டு டோஸ்களாக 28 நாட்கள் இடைவெளியில் செலுத்தப்பட உள்ளது.