உலக நாடுகளை புரட்டி போட்ட கொரோனா வைரஸின் புதிய வகைகள் தொடர்ந்து மக்களை ஆழ்த்தி கொண்டுதான் இருக்கிறது. தற்போது கொரோனாவின் புதிய வகையான ஃபிலிர்ட் வகையான கேபி2 வைரஸால் இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சுமார் 100 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எங்கிருந்து வந்தது இந்த ஃபிலிர்ட் – கேபி2?
கொரோனா வைரஸின் வகையான ஓமிக்ரானின் துணை வகை தான் இந்த கேபி2 வைரஸ் எனும் ஃபிலிர்ட். இந்த வைரஸ் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மேலும், மாறுபாடுகளுடன் கூடிய இந்த புதிய கொரோனா தொற்றால் மக்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதாக அமெரிக்காவின் தொற்று நோய் சங்கம் (ஐடிஎஸ்ஏ) அறிவித்துள்ளது.
இதேபோல், தென் கொரியா, நியூசிலாந்திலும் ’ஃபிலிர்ட்’ வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாகவும், இது மக்களிடையே கொரோனா தொற்றின் புதிய அலை பற்றிய அச்சத்தை ஏற்பத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
நம் இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஜனவரியில் முதல் நோய் பாதிப்பு அடையாளம் காணப்பட்டது. கடந்த 6 ஆம் தேதி வரை கேபி-2 தொற்றால் 238 பேரும், கேபி 1.1- தொற்றால் 30 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சார்ஸ் கோவி-2 ஜீனோமிக்ஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 91 பேருக்கு நோய் பாதிப்புகளை கண்டறிந்துள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வகை கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்ன?
தொண்டை புண், இருமல், குமட்டல், சோர்வு, தலைவலி, தசை அல்லது உடல் வலி, சுவை அல்லது வாசனை இழப்பு போன்றவைகள் ஏற்படலாம்.
அச்சம் வேண்டாம்!
சமீபத்திய ஆய்வில் இந்த வைரஸ் கொரோனா வைரஸின் முந்தைய நிலையை போல் அழிவை ஏற்படுத்தாது, எனவே இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.