கொரோனா பாதிப்பால் இங்கிலாந்து பிரதமருக்கு தீவிர சிகிச்சை! ஐசியு-விற்கு மாற்றம்!
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இங்கிலாந்து பிரதமருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் வெளிநாட்டு பயணிகளின் மூலம் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் 12 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஆரம்பத்தில் சீனாவில் உச்சகட்ட அளவில் இருந்தாலும் தற்போது அங்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலை உருவாகியுள்ளது. சீனாவை விட அமெரிக்கா, இத்தாலி, பிரான்சு போன்ற நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டு இளவரசர் சார்லஸ் மற்றும் அந்நாட்டு பிரதமர் போரி ஜான்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், போரி ஜான்சன் தன்னைத்தானே தனிமைப்படுத்தியதோடு அல்லாமல் தனது பணிகளையும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கவனித்து வந்தார்.
அவருக்கு உண்டான காய்ச்சல் இதுவரை குறையவில்லை என்ற காரணத்தால் லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரதமரின் பரிதாப நிலை இங்கிலாந்து மக்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.