கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்ததாக நினைப்பது மிகப்பெரிய தவறு என மருத்துவகள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலில் 4 லட்சம் என்ற உச்சத்தை பாதிப்பும், 4 ஆயிரத்து 500 என்ற உச்ச்த்தில் உயிரிழப்பும் எட்டியது. இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருவதால் தமிழகம், டெல்லி உட்பட பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநிலத்தில் கொரோனா வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் மருத்துவர் வி. ரவி, நாட்டில் தற்போது கொரோனா பரவல் குறையலாம், நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையலாம். ஆனால், கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்து வருவதாக நினைத்தால் அது மிகப்பெரிய தவறு என்றார். கொரோனா பாதிப்பு விகிதம் 5%க்கு கீழும், பலி எண் ணிக்கைவிகிதம் 1%க்கு குறைவாகவும் பதிவானால்தான் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதாக கூறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு வாரங்களில்தான் கொரோனா தொற்று குறைகிறதா இல்லையா என்பது தெரிய வரும் என்றும் அவர் கூறினார். தற்போது இந்தியாவில் பரவி வரும் வீரியமிக்க டெல்டா வகை வைரஸின் தீவிரம் குறையவில்லை, அது இப்போதும் பரவிக் கொண்டுதான் இருக்கிறது என்றும் தெரிவித்தார். ஒரு வேளை தளர்வுகள் காரணமாக மக்கள் வெளியே வந்து, கட்டுப்பாடுகளை மீறினால் மீண்டும் தொற்று பாதிப்பு வெகுவாக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊரடங்கு காரணமாகவே பாதிப்பு குறைவாக உள்ளது என்ற அவர், ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மீண்டும் தொற்று அதிகரிக்கும் என்றார். கொரோனா தொற்றின் பரவும் வீரியம் குறைந்து விட்டதாக எந்தத் தரவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.