மீண்டும் ஆட்டத்தை காண்பிக்கும் கொரோனா! அச்சத்தில் மக்கள்!
நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு தனது ருத்ர தாண்டவத்தை காண்பிக்க ஆரம்பித்தது கொரோனா என்னும் தொற்று நோய். இந்த நோயினால் பலதரப்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்கள் இன்னுயிரை இழந்தனர். இந்த தொற்று வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்தது.
இந்த கொரோனா தொற்றால் மக்கள் கொத்து கொத்தாக இறந்து வந்ததால் இதனை கட்டுப்படுத்த பொது மக்களுக்கு இலவசமாக நோய் தடுப்பு மருந்துகளும் ஊசிகளையும் செலுத்தியது, இதன் காரணமாக மெல்ல மெல்ல கொரோனா தொற்று 2021ம் ஆண்டு கட்டுக்குள் வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்து வந்தாலும் லேசான பாதிப்புகள் சில மாநிலங்களில் இருந்து வந்தன, இந்த நிலையில் மீண்டும் தனது சுயரூபத்தை காண்பிக்க தொடங்கியது கொரோனா.
கடந்த சில மாதங்களாக லேசான பாதிப்புடன் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா தொற்று தனது வீரியத்தை அதிகரிக்க தொடங்கி தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 6000 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் பொது சுகாதாரத்துறை மூலம் மக்களுக்கு மீண்டும் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அரசு கூறும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் கேரளாவில் தான் 9,422 கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது, இந்த கூட்டத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.