சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளுக்கு காட்டுத்தீ போல பரவியுள்ளது. இந்த நோய் தொற்றால் பல நாடுகளில் இதுவரை 8,56,917 நபர்களுக்கு பரவியுள்ளது, இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,107-ஐ கடந்துள்ளது.
உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியாவிலும் கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இந்த வைரஸால் 2,337 நபர்களுக்கு பரவியுள்ளது, மேலும் 17 நபர்கள் உயிரிழந்தனர் என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் வருகிறது.
இதற்கிடையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதின் கடந்த மார்ச் 24ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்துள்ளார். அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் என அனைவரிடமும் தலைமை மருத்துவர் டென்னிஸ் புரோட்சென்கோவுடன் சந்தித்து பேசியுள்ளார்.
அந்த சந்திப்பில் குறிப்பாக டென்னிஸிடம் பேசும்போது அதிபர் பாதுகாப்புக்காக முகமூடி, கையுறை எதுவும் அணியாமல், கைகளை குலுக்கி இயல்பாக பேசியுள்ளார். அதிபர் புதினுக்கு பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகள் இருக்கும் போது இவ்வாறு அஜாக்கிரதையாக நடந்து கொண்டது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் தலைமை மருத்துவர் டென்னிஸுக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த இந்த சர்ச்சைக்குரிய சந்திப்பால் அதிபர் புதினுக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.
இதனால் அவசரஅவசரமாக புதினை தனிமைப்படுத்தி உள்ளனர் மேலும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாக அதிபர் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.