பிட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா பாதிப்பு! தொடர்புடைய 72 வீடுகள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பு

Photo of author

By Anand

பிட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா பாதிப்பு! தொடர்புடைய 72 வீடுகள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பு

உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பினால் தற்போது வரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுவதும் 1.34 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். ஏறக்குறைய 5.1 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குனமடைந்துள்ளனர்.

இவ்வாறு தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. குறிப்பாக அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற பெரும்பாலான சேவைகள் மற்றும் தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளது.

இந்த கொரோனா வைரசின் கொடூர தாக்குதலானது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பினால் 12,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1400 க்கும் மேற்பட்டோர்கள் இந்த வைரஸ் தாக்குதலிருந்து மீண்டுள்ளனர்.

இவ்வாறு இந்தியாவில் தீவிரமாகும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது.  இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவானது 21 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டிற்கு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் செயலாற்றி வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதனையடுத்து நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி நிலைமையை உணர்ந்து ஊரடங்கு உத்தரவை வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். குறிப்பாக அதற்கு முன்பே நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த மாத இறுதி வரை தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிதுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு தீவிரமாக செயல்பட்டு வரும் இந்நிலையில் டெல்லியில் பிட்சா டெலிவரி செய்யும் நபர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள 72 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், ” சட்டர்பூரில், பிட்சா டெலிவரி செய்யும் நபர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் வேலை சம்பந்தமாக தொடர்புடைய 17 மற்ற டெலிவரி செய்யும் நபர்கள், 72 வீடுகளில் பாதிக்கப்பட்ட இந்த நபரிடம் பிட்சா வாங்கிய நபர்கள் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒருமாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அந்த நபர், மருத்துவரிடம் சென்றபோது சாதாரண இருமல், சளி என நினைத்து மருத்துவர் சிகிச்சையளித்துள்ளார். ஆனால் தொடர்ந்து உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, அந்த நபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.