இளைஞர்கள் நினைத்தால் மலையை கூட இழுத்துவர முடியும்! இளைஞர்களுக்கு அன்பு வேண்டுகோள் வைக்கும் ராமதாஸ்!!
கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் இருசக்கர வாகனங்களை வீட்டில் பூட்டி வையுங்கள் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் பலர் வெளியில் அலட்சியத்துடன் சுற்றி வருகின்றனர். இதனால் காவல்துறையில் நூதன தண்டனை மற்றும் விழிப்புணர்வு சம்பவமும் நடந்து வருகின்றன. அரசும் போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து ஒரு வாரங்கள் கடந்த நிலையில், அதுபற்றிய அச்சமும் விழிப்புணர்வும் மக்களிடம் இல்லை. பொதுமக்கள் வழக்கம்போல வெளியே நடமாடுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாலையில் சுற்றித் திரிகின்றனர். இதுகுறித்து ராமதாஸ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அவரது டுவிட்டரில் கூறியதாவது;
இந்த நாட்டின் எதிர்கால தூண்களான இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களது இருசக்கர வாகனங்களை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு அத்தியாவசிய தேவை அன்றி வெளியில் எட்டிப்பார்க்க வேண்டாம், அதுவே கொரோனா தடுப்புக்கு நீங்கள் செய்யும் பெருந்தொண்டு என கூறியுள்ளார்.
மேலும், இளைஞர்களின் சக்தி நினைத்தால் இமயத்தையே இழுத்து வர முடியும் என்றும், உங்களால்தான் தமிழ்நாட்டு மக்களை காக்க முடியும் ஆகவே அவர்களை பாதுகாக்கும் பொருட்டு வீட்டிலேயே மகிழ்ச்சியாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.